அம்பானியை குற்றம் சாட்டிய எலான் மஸ்க்கிற்கு பதிலளித்து ராகுல் காந்தி பரபரப்பு பதிவு

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக எலான் மஸ்க் எழுப்பிய கேள்விகளும், அதற்கு ராகுல் காந்தி அளித்த பதிலும் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
அம்பானியை குற்றம் சாட்டிய எலான் மஸ்க்கிற்கு பதிலளித்து ராகுல் காந்தி பரபரப்பு பதிவு
Published on: 

புதுடெல்லி:

இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து, உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியை குறிப்பிட்டு, “அம்பானிதான் இந்தியாவின் உண்மையான முதலாளியா?” என்று அவர் கூறியிருந்த நிலையில், இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் சேவை

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறது. உலகின் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதாக ஸ்டார்லிங் கூறி வருகிறது. இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற கடந்த 5 ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகவும் எனினும், இந்தியாவில் வணிக ரீதியிலான சேவையைத் தொடங்குவதற்கான இறுதி அனுமதி கிடைக்காதது ஏன் என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சில பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்திய வருகையைத் தடுப்பதாகவும் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பானி குறித்து கேள்வி

இதுதொடர்பாக வெளியிட்ட மற்றொரு பதிவில், “ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அரசின் அனைத்து சட்டங்கள் மற்றும் தேவைகளுக்கும் இணங்க கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறோம். அப்படியிருக்க, இன்னும் ஏன் உரிமம் கிடைக்கவில்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான முதலாளியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கருத்து அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி பதில்

மஸ்க்கின் பதிவுக்குப் பதிலளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்து பதிவிட்டுள்ளார. ராகுல் காந்தி கூறுகையில், “இந்தியாவுக்கு வரவேற்கிறேன், எலான் மஸ்க். இன்னொருவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வரை காத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது பதிவில் அந்த நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை. எனினும், அவரது கருத்து தொழிலதிபர் கவுதம் அதானியைக் குறிப்பதாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “நன்றி, ராகுல். இது உண்மையிலேயே கவலைக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விளக்கம்

இதற்கிடையே, ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது.இந்தியாவின் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடைமுறை நியாயமானது என்றும், எந்த நிறுவனத்துக்கும் எதிராகப் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோவின் செயற்கைக்கோள் இணையப் பிரிவு மற்றும் பார்தி குழுமத்தின் ஆதரவு பெற்ற ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக ரீதியிலான சேவைகளைத் தொடங்குவதற்கு தேவையான பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனுமதிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.மூன்று நிறுவனங்களுக்குமே பாதுகாப்பு மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும், இந்த நடைமுறை முடிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com