

அமெரிக்காவைச்சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் பங்குகளை கொண்டுள்ள ஜப்பான் நாட்டைச்சேர்ந்த சாப்ட்பாங்க் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்து உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு (ஜப்பான் நேரப்படி) வால்மார்ட் -பிளிப்கார்ட் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானதாக சாப்ட்பேங் சிஇஓ மசயோஷி சன் தெரிவித்ததாக ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாப்ட்பேங்க் நிறுவனம் பிளிப்கார்ட்டில் கொண்டிருந்த 20 சதவீத பங்குகளையும் வால்மார்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 18 முதல் 20 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கலாம் என கூறப்படுகிறது. வால்மார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய கையகப்படுத்துதல் இதுவாகத்தான் இருக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன. கூகுள் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆல்பாபெட் ஐஎன்சி இந்த ஒப்பந்தத்தில், வால்மார்ட் நிறுவனத்துடன் பங்குதாரராக இருக்க கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. பிளிப்கார்ட்டின் 60 சதவீத பங்குகளை வால்மார்ட் பெறும் எனவும் ஆல்பாபேட் நிறுவனம் 15 சதவீத ஓனர்ஷிப் உரிமையை பெறும் எனவும் ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பில்லியன் டாலர் மின்னணு வர்த்தக நிறுவனமான, பிளிப்கார்ட் 80 விதமான பிரிவுகளில் சுமார் 8 மில்லியன் பொருட்களை விற்பனை செய்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் மட்டும் ஏறத்தாழ 100 மில்லியன் பேர் உள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்தில், டைகர் குளோபல், நாஸ்பேர்ச் உள்ளிட்ட நிறுவனங்களும் பெரிய அளவில் முதலீடுகளை கொண்டுள்ளன. பிளிப்கார்ட்டின் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் தலா 5 சதவீத பங்குகளை மட்டுமே கொண்டுள்ளனர்.
இந்தியாவின் 40 சதவீத ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தை பிளிப்கார்ட் நிறுவனம் கொண்டுள்ளது. இதற்கிடையே, பிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுமார் 5 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்போவதாக அண்மையில் அறிவித்து உள்ளது.
மொத்த வர்த்தகத்தில் பாரதி எண்டர்பிரைசுடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு இறங்கிய வால்மார்ட் நிறுவனம், 2013 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்தது. தற்போது, இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் 20 மொத்த விற்பனையகங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் கால்பதிக்க முயற்சித்த வால்மார்ட் நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது நினைவிருக்கலாம்.