வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: இந்திய எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு இல்லை

நாட்டில் குறைந்தது 10 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: இந்திய எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு இல்லை
Published on

புதுடெல்லி,

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 88 சதவீதத்தை இறக்குமதியிலேயே சார்ந்துள்ளது. மேலும் மின்சாரம் உற்பத்தி, உர உற்பத்தி, வீட்டு சமையல் மற்றும் வாகனங்களுக்கான கியாஸ் பயன்பாட்டிற்கு தேவையான இயற்கை எரிவாயுவின் பாதியையும் இறக்குமதி செய்கிறது. சமையல் கியாஸ் தேவையும் பெருமளவில் இறக்குமதியிலேயே உள்ளது.

கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் தினமும் 27 லட்சம் பேரல்கள், அதாவது 50 சதவீதம், ஈரான் நிர்வகித்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. இது பெரும்பாலும் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து பெறப்படுகிறது.

மேலும், இந்தியாவின் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியின் 60 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. இந்தியா பயன்படுத்தும் சமையல் எரிவாயு முழுவதும் இதே பாதை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தின. இதனால் அந்த நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. முக்கியமான எண்ணெய் கடற்பாதையான ஹார்முஸ் நீரிணை மூடப்பட் டாலும், இந்தியாவுக்கு உடனடி காலத்தில் எண்ணெய் வினியோக தடங்கல் ஏற்பட வாய்ப்பு குறைவு என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் குறைந்தது 10 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பும், மேலும் 7 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்கலாம் என்பதால் இதனை எதிர்கொள்ள இந்தியா முன்னெச்சரிக்கை திட்டங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால தடங்கல் ஏற்பட்டால், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியை அதிகரித்து இந்தியா தனது எண்ணெய் வாங்கும் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் என தெரிவித்தனர். உடனடி விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பதால், தேவையானால் வெனிசுலா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் இந்தியா வாங்க முடியும் என மற்றொரு அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க அழுத்தத்தால் முன்பு ரஷியாவிலிருந்து வாங்குவதை இந்தியா குறைத்திருந்தாலும், மத்திய கிழக்கு வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டால் மீண்டும் ரஷிய எண்ணெய் வாங்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com