

புதுடெல்லி
போர்கள், ஸ்திரமற்ற சூழலில் இந்தியா 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
நடப்பு 2026-27 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள வீடியோ செய்தியில், 7.8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்ததற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களுடைய உறுதியான முடிவெடுத்தல் மற்றும் கூட்டு முயற்சிகளால் இது சாத்தியமடைந்துள்ளது. எல்லா இடங்களிலும் மோதல்கள், போர்கள் மற்றும் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டபோதிலும், இந்தியா இந்த மைல்கல்லை அடைந்து சாதனை படைத்துள்ளது.
2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதில் இருந்து, எந்த இடத்திலும் நிலைத்தன்மை இல்லை. ஆனால், இந்தியா நன்றாக வளர்ச்சி அடைந்தது.
இந்தியாவில் ஒரு சிலர் எதிர்மறை தன்மையையும், பொய்யான தகவலையும் பரப்ப முயற்சித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நாடு வளர்ந்து கொண்டே உள்ளது.
நம்முடைய வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். நாம் இன்னும் வளர வேண்டும். அதற்கு கட்டாயம் சுயசார்புடன் இருக்க வேண்டும். இளைஞர்களின் கனவுக்கு நம்முடைய கடின உழைப்பு அவசியம் என்பது உணரப்பட வேண்டும். அதற்கேற்ப முயற்சிகளில் குறைவு இல்லாமல் செயல்படுவோம் என கூறினார்.