காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் குதித்தது ஏன்? மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் குதித்தது ஏன்? என்பது குறித்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் குதித்தது ஏன்? மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
Published on

களத்தில் குதித்தது ஏன்?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் 17-ந்தேதி நடக்கிறது. இதில் சற்றும் எதிர்பாராமல் கடைசி நேரத்தில், முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே களத்தில் குதித்தார்.

அவர் பீகார் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட பாட்னாவுக்கு நேற்று சென்றார். அங்கு அவர் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 18 மணி நேரத்துக்கு முன்பாக நான் போட்டியிடுமாறு கூறப்பட்டேன். என்னை எதற்காக தலைவர் தேர்தலில் நிற்கச்சொல்கிறீர்கள் என நான் கேட்டேன். அதற்கு, தனது குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடுவதை ராகுல் காந்தி விரும்பவில்லை என்று எனக்கு கூறப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியும், அவரது தலைமையும் தேவைப்படுகிறது என்பது என்று நான் நம்புகிறேன். அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும். ஆனால் நான் அவரது உணர்வுகளின் உன்னதத்தை மதிக்கிறேன்.

செய்யப்போவது என்ன?

நான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், 50 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தேர்தலில் 50 சதவீத டிக்கெட்டுகள் ஒதுக்கீடு உள்ளிட்ட உதய்பூர் சிந்தனை அமர்வு பிரகடனத்தை செயல்படுத்துவேன்.

சசிதரூர் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பற்றி கேட்கிறீர்கள். இதற்கான அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன். ஊடகங்களில் அளவுகடந்த பேட்டியும் தேவையில்லை.

இந்த தேர்தல்கள், குடும்பத்தின் உள் விவகாரம் மாதிரிதான். நானும் அதில் அங்கம் வகிக்க இங்கே நிற்கிறேன். ஆனால் நான் பகிரங்கமாக பொதுவெளியில் கூற விரும்பாத பல விஷயங்கள் உண்டு.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com