விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமனா? - பா.ஜ.க. எம்.பி.க்கு கனிமொழி கண்டனம்

கோப்புப்படம்
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் என்று கூறிய பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தையொட்டி இமாசலபிரதேச மாநிலம் உனா நகரில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு "நீல் ஆம்ஸ்ட்ராங்" என மாணவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் பதில் அளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர், "விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என நான் உணர்கிறேன். இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திய பாரம்பரியம், அறிவு, கலாசாரம் என முக்கியமானவற்றை காட்டுகிறது. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்க வேண்டும்” என்றார்.
அனுராக் தாக்கூரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அனுராக் தாக்கூருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல.
வகுப்பறைகளில் மாணவர்களை தவறாக வழிநடத்துவது இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக்கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையை ரஷியாவை சேர்ந்த யூரி ககாரின் பெற்றுள்ளார். கடந்த 1961-ல் அவர் பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் 1969-ம் ஆண்டில் நிலவில் தரையிறங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது குறிப்பிடத்தக்கது.






