

ஸ்ரீநகர்,
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுபோட்டு அழித்தன. அதன் மறுநாள், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.
இந்த பதற்றமான சூழலில், காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது; அதில் இருந்த 6 பேரும் பலியாகினர் என தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், அந்த ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு அமைப்பினால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது பற்றி கருத்து தெரிவிக்க இந்திய விமானப்படை மறுத்துவிட்டது.