

புதுடெல்லி:
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டன.
இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட்டன. இதனால் மத்திய அரசு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மழைக்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தற்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பாதுகாவலர்கள் இடையேயான தள்ளுமுள்ளு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாவலர்களை தள்ளுவது போன்ற சிசிடிவி காட்சி இன்று வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பாதுகாவலர்கள் கடினமாக நடந்து கெண்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி இன்று வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை நடுவே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்புவது, பாதுகாவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயற்சிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய 2.5 மணி நேர சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் காகிதங்களை கிழித்து தூக்கி ஏறிவது, அதில், ஒருவர் மேஜையில் ஏறுவது போன்றவையும் வீடியோவில் பதிவாகியுள்ளது.