நீர் பாதுகாப்பு ஒரு பகிரப்பட்ட பொறுப்புணர்வு - பிரதமர் மோடி; அறிவியல்பூர்வ தீர்வு காண அழைப்பு

நீர் பாதுகாப்புக்கு வலிமையான அமைப்புகள், அறிவியல்பூர்வ தீர்வுகள் மற்றும் பொதுமக்களின் நீடித்த பங்கு ஆகியவை தேவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

நீர் பாதுகாப்பு ஒரு பகிரப்பட்ட பொறுப்புணர்வு என்றும் அதற்கு அறிவியல்பூர்வ தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் மத்திய ஜல சக்தி அமைச்சகத்தின் சார்பில் இன்று தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

பெரிய சவால்

இதன்படி, புதுடெல்லியில் நடந்த 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி ஒன்றில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டு, தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், நீர் தட்டுப்பாடு தொடர்ந்து ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்றார். விலைமதிப்பில்லா வளங்களில் ஒன்றான நீரை பாதுகாப்பதில் மிகப்பெரிய விழிப்புணர்வு வர வேண்டும் என்று அப்போது அவர் கேட்டு கொண்டார்.

நீர் பாதுகாப்பு

இதேபோன்று நீர் பாதுகாப்பை வலியுறுத்தி பிரதமர் மோடி இன்று கூறும்போது, அது ஒரு பகிரப்பட்ட பொறுப்புணர்வு என்றும் அதில் பொதுமக்களின் நீடித்த பங்கும் தேவை என்று கூறினார். அவர், நீர் பாதுகாப்புக்கு வலிமையான அமைப்புகள், அறிவியல்பூர்வ தீர்வுகள் மற்றும் பொதுமக்களின் நீடித்த பங்கு ஆகியவை தேவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், மத்திய நீர் சக்தி துறை மந்திரி சி.ஆர். பாட்டீல் எழுதிய கட்டுரை ஒன்றை பகிர்ந்து குறிப்பிடும்போது, மாநிலங்கள் மற்றும் சமூகங்களின் நீடித்த முயற்சிகளுடன் கூட, மக்களின் பங்கேற்பு எப்படி, வருங்கால தலைமுறைக்கு வேண்டிய நீரை பாதுகாத்து தர உதவ முடியும்? என்று சி.ஆர். பாட்டீல் சிறப்பான முறையில் தன்னுடைய பார்வைகளை கட்டுரையில் பகிர்ந்திருக்கிறார் என்று கூறினார்.

நீர் மேலாண்மை

ஜல ஜீவன் திட்டம், கங்கையை தூய்மைப்படுத்துதல், நீர் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றின் வழியே பருவநிலை பாதிப்புகளில் இருந்து மீண்டு, நீர் மேலாண்மையை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் முயற்சிகளை பற்றியும் அவர் எழுதியுள்ளார் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com