பிரதமர் மோடி, மோரீசன் முன்னிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மோரீசன் முன்னிலையில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது 5 ஆண்டுகளில் ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகத்துக்கு வாய்ப்பு அளிக்கும்.
பிரதமர் மோடி, மோரீசன் முன்னிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
Published on

இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு உள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், சந்தை வாய்ப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே இண்ட்ஆஸ் எக்டா என்று அழைக்கப்படுகிற இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவாகி இருந்தது.

அதன்படி பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் முன்னிலையில் காணொலி காட்சி வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயலும், ஆஸ்திரேலிய வர்த்தக மந்திரி டான்டெஹானும் கையெழுத்திட்டனர்.

ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகம்

இந்த ஒப்பந்தமானது, இரு தரப்பு வர்த்தக தடைகளை நீக்கவும், மொத்த பொருட்களுக்கு வரி விலக்கையும் உறுதி செய்கிறது.

மேலும் இந்த ஒப்பந்தம், தற்போதைய 27 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2.02 லட்சம் கோடி) இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.75 லட்சம் கோடி) வரையிலான வர்த்தகமாக உயர்த்துவதற்கு உதவும்.

பரஸ்பர நம்பிக்கையின் ஆழம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

ஒரு குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது இருநாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையின் ஆழத்தை காட்டுகிறது. நமது இரு தரப்பு உறவில் இது ஒரு முக்கிய தருணம். இந்த ஒப்பந்த அடிப்படையில், நாம் ஒன்றாக வினியோக சங்கிலியை அதிகரிக்க முடியும். இந்தோபசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

மேலும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே மாணவர்கள், தொழில் வல்லுனர்கள், சுற்றுலா பயணிகளின் பரிமாற்றத்துக்கு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெருக்கமான உறவு வலுவாகும்

இந்த நிகழ்ச்சியின்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறியதாவது:-

இந்த ஒப்பந்தம், இரு தரப்பு உறவில் மற்றொரு மைல்கல். இது உறவின் வாக்குறுதியின் அடிப்படையில் உருவாகி உள்ளது. இரு தரப்பு வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், படிப்பு, வேலை, பயண வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இரு தரப்பு மக்கள் இடையே அருமையான, நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலிய விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலருக்கு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாட்டில் கதவைத்திறக்கிறது. இந்தியாவின் 140 கோடி நுகர்வோருக்கு மிகப்பெரிய சந்தையை திறப்பதன் மூலம் நாங்கள் பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் பெருக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com