

வயநாடு,
வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 400 உடல்கள் மற்றும் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனை நேற்று நிறைவடைந்தது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக நிலச்சரிவு ஏற்பட்டு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வயநாட்டில் நேற்று 15-வது நாளாக சூரல்மலை, முண்டக்கை, சாலியாற்றில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்தது. இதில் முண்டேரி அருகே வாணியம்புழா பகுதியில் இருந்து 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டன. தலப்பாலி பகுதியில் ஒரு கால் மீட்கப்பட்டது. அவை பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ பரிசோதனைக்காக நிலம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் சூரல்மலை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீட்பு பணிக்காக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்தது. கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதேபோல் முண்டக்கை, புஞ்சிரிமட்டம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. கனமழையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்லி பாலம் மூடப்பட்டு உள்ளது. அந்த வழியாக மீட்பு குழுவினர், பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே முண்டக்கை மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இருவழிஞ்சிப்புழாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக வயநாட்டில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.