வயநாடு நிலச்சரிவு: அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

உதவி தேவைப்படுபவர்கள், தங்களது பெயர் மற்றும் இருப்பிடங்களை தெரிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவு: அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு
Published on

சென்னை,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவு தொடர்பான விபரங்களை வழங்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுபவர்கள், தங்களது பெயர் மற்றும் இருப்பிடங்களை தெரிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண மீட்புப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாட்டிலிருந்து டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., மற்றும் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவை அனுப்பி வைத்தார்கள். அந்த மீட்புக் குழு உடனடியாக வயநாடு சென்று முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், மேப்பாடி, சூரமலை ஆகிய பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிட குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன.

நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்திட வயநாட்டின் மேப்பாடியில் செயல்படும் முக்கிய நிவாரண முகாமில் உதவி மையம் ஒன்றை தமிழ்நாட்டு மீட்புக் குழுவினர் நிறுவியுள்ளனர். அங்கு உதவி மேசையும் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களை 9894357299 - 9344723007 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும், உதவி மையத்தை தொடர்பு கொள்பவர் தங்களுடைய பெயர், அவர்களின் இடம், கூற விரும்பும் செய்தி ஆகியவற்றை மேற்கண்ட எண்களில் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., மற்றும் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோரிடம் தெரிவிக்குமாறும் தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com