வயநாடு நிலச்சரிவு துயரம்: கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 3- நாளாக நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன்படி வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த சூழலில் கடந்த 29-ந் தேதி இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனைத்தொடர்ந்து வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 3- நாளாக இன்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,500- க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழலில், திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மந்திரிகள் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வயநாடு பெரும் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு மந்திரிகள் ஒரு மாத சம்பளத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள், மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com