வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
Live Updates
- 1 Aug 2024 12:31 AM IST
கேரளாவில் கனமழையை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
- 31 July 2024 10:37 PM IST
கோழிக்கோடு மாவட்டத்தில் நிவாரண முகாமை பார்வையிட விளங்காடு பகுதிக்கு கலெக்டர் சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய கலெக்டர், பின்னர் மீட்பு படையினரின் முயற்சியால், கயிறு கட்டி மீட்கப்பட்டார்.
- 31 July 2024 9:48 PM IST
வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறி குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதி மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 31 July 2024 9:23 PM IST
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்
நாளை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காசர்கோடு, கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
மேலும், வட கேரளாவில் கனமழைக்கான தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம்,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- 31 July 2024 9:00 PM IST
கவுதம் அதானி ரூ.5 கோடி நிதியுதவி
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வர கேரளாவிற்கு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு கவுதம் அதானி ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 31 July 2024 8:43 PM IST
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 270-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏராளமானோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- 31 July 2024 7:41 PM IST
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 251-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 31 July 2024 7:18 PM IST
கனமழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து முண்டக்கை அருகே தற்காலிகமாக போடப்பட்ட மரப் பாலம் நீரில் மூழ்கியது. மேலும் அப்பகுதிக்கு மீட்பு பணிக்கு சென்ற மீட்பு குழு, மீட்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைவரும் சிக்கி தவித்துள்ளனர்.