பெங்களூருவின் மக்களுக்காக பாதயாத்திரை நடத்துகிறோம் - கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

பெங்களூரு நகரில் 3 நாட்கள் பாதயாத்திரை நடப்பதாகவும், இதனால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூருவின் மக்களுக்காக பாதயாத்திரை நடத்துகிறோம் - கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
Published on

பெங்களூரு,

மேகதாது திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமாவில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. 4 நாட்கள் நடந்த பாதயாத்திரை கொரோனா 3-வது அலை காரணமாக ஜனவரி 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று 3-வது நாள் பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எங்களின் மேகதாது பாதயாத்திரை பெங்களூரு நகருக்குள் வந்துள்ளது. எங்கள் கட்சியின் பேனர்களை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதை எங்கள் கட்சியின் நிர்வாகிகள் தடுத்துள்ளனர். பா.ஜனதா தலைவாகளின் பேனர்களையும் அகற்றும்படி எங்கள் கட்சியின் தொண்டர்களுக்கு உத்தரவிடுவோம். சட்டம் அனைவருக்கும் ஒன்றே.

அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது இந்த அரசு வழக்குகளை போட்டுள்ளது. இந்த பாதயாத்திரையை தடுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் ஆகும். எடியூரப்பா, மந்திரிகள் சோமண்ணா, அஸ்வத் நாராயண் ஆகியோரின் பேனர்களை பெங்களூருவில் வைத்துள்ளனர். அவாகளின் பேனர்களை வைக்க அனுமதி வழங்கியது யார்?

எங்கள் கட்சியின் கொள்கை, திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்க பேனர்களை வைக்கிறோம். நாங்கள் பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதால் பெங்களூருவில் இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து நெரிசல் உண்டாகும். இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த பாதயாத்திரை மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் பிரச்சினை தீரும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது.

நாங்கள் பெங்களூருவின் மக்களுக்காக பாதயாத்திரை நடத்துகிறோம். அதனால் இதில் நகர மக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்து கொள்கிறோம். பெங்களூருவில் 3-ந் தேதி (நாளை) பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது.

குடிநீர் திட்டத்திற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்று முதல்-மந்திரியே கூறியுள்ளார். பாதயாத்திரை நடத்துவதால் சுப்ரீம் கோர்ட்டில் மேகதாது தொடர்பான வழக்கில் கர்நாடகத்திற்கு இடையூறு ஏற்படும் என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார். அவருக்கு போராட்டம் நடத்தி பழக்கம் இல்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com