

புதுடெல்லி,
இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பல்ராம் பார்கவா கூறியதாவது:-
தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. ஜுலை மாத பாதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டு மொத்த பேருக்கும் தடுப்பூசி போட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:- கோவிஷீல்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை. முதல் டோஸ் செலுத்தி 12 மாதங்களுக்குப் பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும். இதே கால அளவுதான் கோவேக்சினுக்கும் பின்பற்றப்படும். கடந்த 24 மணி நேரத்தில் 1.24 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 28 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருகிறது. தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் சதவிகிதம் 92 சதவிகிதமாக உள்ளது. ஒருவாரமாக தினமும் சராசரியாக 20 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தினமும் 1.3 லட்சம் என்ற எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இது பாசிட்டிவ் டிரெண்ட் ஆக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 1.67 கோடி சுகாதார பணியாளர்கள், 2.42 கோடி முன்கள பணியாளர்கள், 15.48 கோடி , 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 21.60 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்றார்.