

புதுடெல்லி,
பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசுசின், பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூரு தவிர்த்து தென் மாநிலங்களுக்கு என சொல்லும்படியாக பெரிய எதிர்பார்ப்பு அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இரண்டாக பிரிக்கப்பட்ட தெலுங்கு மாநிலங்களிலும் அதிகமான எதிர்பார்ப்பு பட்ஜெட் மீது இருந்தது. ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டும், அதற்கான மேம்பாட்டு பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் வரும் நிலையில் பட்ஜெட் மீது அம்மாநில மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் அமராவதி கட்டமைப்பு நிதிஉதவி இடம்பெறாதது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா இடையே மோதல் போக்கு காணப்படுவதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது என மத்திய மந்திரி ஒருவர் விமர்சனம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் மற்றும் மத்திய அறிவியல்-தொழில்நுட்ப துறைகளின் இணை அமைச்சரான ஒய்.எஸ். சவுத்ரி பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் நாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளோம். ரெயில்வே மண்டலம், ஆந்திரப் பிரதேசத்துக்கான நீர்ப்பாசனத் திட்டம் (போலவரம் திட்டம்), தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு நிதி மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கான நிலுவகையில் உள்ள திட்டங்கள் எதையும் மத்திய பட்ஜெட் சரிசெய்யவில்லை,என கூறிஉள்ளார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு முக்கிய அம்சங்கள் இடம்பெறாத நிலையில் வரும் ஞாயிறு அன்று முதல்-சந்திரபாபு நாயுடு ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் எனவும் ஓய்.எஸ். சவுத்ரி கூறிஉள்ளார்.