

புதுடெல்லி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே, தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் இந்திய இராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், சுமார் 70 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையில் இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோரை இந்தியா இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
மேலும், இவ்விஷயத்தில் இனியும் இந்தியா பொறுமை காக்கமுடியாது எனத் தெரிவித்த அவர், போரின் வாயிலாக பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டுவது தான் சரியான தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.