மோடி அரசு அராஜகத்தை பரப்புகிறது; எங்களால் சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய முடியும் - மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்காளத்தில் மோடி அரசு அராஜகத்தை பரப்புகிறது என மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார்.
மோடி அரசு அராஜகத்தை பரப்புகிறது; எங்களால் சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய முடியும் - மம்தா பானர்ஜி ஆவேசம்
Published on

கொல்கத்தா,

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக விசாரிக்கும் சிபிஐ இன்று கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார் வீட்டிற்கு சென்றது. அப்போது சிபிஐ அதிகாரிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது. உடனடியாக அங்கு சிறப்பு பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது. கமிஷ்னர் வீட்டிற்கு மம்தா பானர்ஜி வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு வங்காளத்தில் மோடி அரசு அராஜகத்தை பரப்புகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காளத்திற்கு பா.ஜனதா தொல்லை கொடுக்கிறது. அவர்கள் வலுக்கட்டாயமாக மேற்கு வங்காளத்தை அழிக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி நேற்று மிரட்டியதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இப்போதும் சொல்வேன் ராஜீவ் குமார் இந்த உலகத்திலே சிறந்தவர் என்று.பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். நீங்கள் எந்தஒரு நோட்டீசும் கொடுக்காமல் கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களால் சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய முடியும், ஆனால் நாங்கள் செய்யவில்லை.

என்னுடைய படைகளுடன் நான் உள்ளேன். அவர்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். இன்று மிகவும் வேதனையை உணர்கிறேன். இது கூட்டாட்சி முறையை அழிப்பதாகும், என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு என்ன?

ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்கள் மீதான மோசடி வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரியாக செயல்பட்டவர் ராஜீவ் குமார். வழக்கு விசாரணையில் முக்கியமான ஆவணங்கள் மாயமானதை அடுத்து விசாரணைக்கு உதவுமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக சம்மன் விடுத்தும் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com