தினசரி எரிபொருள் உற்பத்தியை 54 ஆயிரம் டன்களாக உயர்த்தி இருக்கிறோம்: மத்திய மந்திரி புரி

இந்தியாவிடம் 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய், 60 நாட்களுக்கான எல்.என்.ஜி. மற்றும் 45 நாட்களுக்கான சமையல் கியாஸ் கையிருப்பு உள்ளது.
தினசரி எரிபொருள் உற்பத்தியை 54 ஆயிரம் டன்களாக உயர்த்தி இருக்கிறோம்:  மத்திய மந்திரி புரி
Published on

புதுடெல்லி

டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர வர்த்தக உச்சிமாநாடு 2 நாட்களாக நடைபெறுகிறது. 2-ம் நாளான இன்று நடந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கலந்து கொண்டு பேசும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுகளால் பல்வேறு நாடுகளும் எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகின்றன.

எரிபொருள் விலையுயர்வும் அந்நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது. எனினும், இந்தியா தொடர்ந்து நிலையான இடத்தில் உள்ளது என்று பேசியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை.

உலகில் உள்ள பிற நாடுகள், எரிபொருள் கிடைப்பதிலும், வினியோகத்திலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. அவற்றின் விலையும் 50 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதுபோன்ற சூழலில் நாம் இன்று இருக்கிறோம்.

ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டு, இன்றுடன் 75 நாட்கள் ஆகின்றன. இதனால், நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. ஆனால், இந்த சவாலை ஒரு வாய்ப்பாக இந்தியா மாற்றியுள்ளது. உள்ளூரில் சமையல் கியாஸ் சிலிண்டர் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது.

இதன்படி தினசரி 36 ஆயிரம் டன்கள் என இருந்த உற்பத்தி அளவை, 54 ஆயிரம் டன்களாக உயர்த்தி இருக்கிறோம் என்றார். இந்தியாவிடம் தற்போது, 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய், 60 நாட்களுக்கான எல்.என்.ஜி. மற்றும் 45 நாட்களுக்கான சமையல் கியாஸ் என போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளது. இதனால், நாடு முழுவதும் தடையற்ற வினியோகம் உறுதி செய்யப்படுகிறது என்றார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

தொடர்ந்து, ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகாதபோதும் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா-ஈரான் போருக்கு முன்பு வரை சராசரியாக தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும்.

எனினும், கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியான தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே பயணிக்கவில்லை என கடல்சார் போக்குவரத்துக்கான அமைப்பு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியில், போருக்கு முன்பிருந்த போக்குவரத்து நிலை திரும்ப வேண்டும் என கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை தூதர்கள் வலியுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com