நாட்டில் 100 சதவீத படிப்பறிவை நாம் எட்டவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் 100 சதவீத படிப்பறிவை நாம் எட்டவில்லை என்று ஆசிரியர் தின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
நாட்டில் 100 சதவீத படிப்பறிவை நாம் எட்டவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
Published on

பெங்களூரு:-

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்கள் 43 பேருக்கு விருது வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

விவசாயிகள், ராணுவத்தினர், ஆசிரியர்கள் ஆகியோர் சமூகத்தின் முக்கிய தூண்கள். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள். பட்டம் பயின்று டாக்டர் பட்டம் பெற்றாலும் அதில் அறிவியல் மனோபாவம், பகுத்தறிவு தன்மை வளராவிட்டால் மூளையில் மூடநம்பிக்கை நிரம்பி கொள்ளும். இதனால் கல்வியறிவு பெற்றும் பயனில்லை.

அரசியல் சாசனம்

பட்டம் பெற்றவர்களே சாதியவாதிகளாக உருவானால் எதற்காக கல்வியை பெற வேண்டும்?. சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்கு கல்வி கிடைக்காமல் இருந்தது. நமது அரசியல் சாசனம் அனைவருக்கும் கல்வி உரிமையை வழங்கியது. இப்போது அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.

நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் நாம் 100 சதவீத படிப்பறிவை எட்டவில்லை. நமது சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவு நனவாக வேண்டுமெனில் அனைவருக்கும் அறிவியல், பகுத்தறிவு கல்வி கிடைக்க வேண்டும். அதன் மூலம் நாடு வளர்ச்சி பாதையில் நடைபோட வேண்டும். ஆசிரியர் தொழிலுக்கு வரும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு மடிக்கணினி

ஆனால் வெவ்வேறான மாவட்டங்களில் தேர்வு முடிவுகள், கல்வியின் தரம் மாறுவது ஏன் என்பது குறித்து ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆயிரம் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளோம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்கும் பணியை தொடங்கினோம்.

அதன் பிறகு வந்த அரசு இந்த திட்டத்தை நிறுத்தியது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்துகிறோம். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளில், 80 சதவீதம் பேர் அடிமட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் படிப்புக்கு பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இலவச பால் வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். வாரம் 2 நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை 10-ம் வகுப்பு வரை நீட்டித்துள்ளோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com