

புதுடெல்லி,
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில் கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் 3-வது முறையாக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1.37 மணியளவில் கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்@யாஹூ.காம் என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில், உங்கள் டெல்லி போலீசால் எதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது. எங்களின் உளவாளிகள் போலீஸ் துறையிலும் உள்ளனர். உங்களைப்பற்றிய அனைத்து தகவல்களும் எங்களுக்கு கிடைத்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் கம்பீருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை என இரண்டு முறை கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்ஞ்சல் அனுப்பியவரின் அடையாளங்களை கண்டறிய கூகுள் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.