தினமும் இனி 9.15 மணி நேரம் வேலை..ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு


தினமும் இனி 9.15 மணி நேரம் வேலை..ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
x
தினத்தந்தி 7 July 2025 12:41 AM IST (Updated: 7 July 2025 12:41 AM IST)
t-max-icont-min-icon

நிறுவனத்தில் அறிவிப்பால் பல ஊழியர்கள் மன உளைச்சலில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

புதுடெல்லி,

உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்தநிலையில், ஊழியர்கள் அனைவரும் தினமும் இனி 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில், வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்று அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்து இருந்தார். அவரின் இத்தகைய கருத்துக்கு இருவேறு விதமான விமர்சனங்கள் சமூக வலை தளங்களில் எழுந்தன. இந்நிலையில், இன்போசிஸ் ஊழியர்கள் நாள்தோறும் (வாரத்தில் 5 பணி நாட்கள்) 9.15 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த மின்னஞ்சல் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது தொலைதூரங்களில் அதாவது வீடுகளில் இருந்து பணிபுரிபவர்களும் 9.15 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு பறந்துள்ளது.

இந்த மின்னஞ்சலை இன்போசிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை (ஹெச்.ஆர்.டி) அனுப்பி உள்ளது. பணி நேரம் இனி கண்காணிக்கப்படும், மாதத்தின் இறுதியில் அந்த விவரங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஹெச்.ஆர்.டி கூறி உள்ளது. நிறுவனத்தில் அறிவிப்பால் பல ஊழியர்கள் மன உளைச்சலில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

1 More update

Next Story