பிற வழிபாட்டு முறைகளையும் நாங்கள் மதிக்கிறோம்: மோகன் பகவத் பேச்சு

பிறரது வழிபாட்டு முறைகளை மதிப்பதுடன், நமது சொந்த பாரம்பரியத்தையும் வழிபாட்டு முறையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்று மோகன் பகவத் கூறினார்.
பிற வழிபாட்டு முறைகளையும் நாங்கள் மதிக்கிறோம்: மோகன் பகவத் பேச்சு
Published on

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினில் யுவ தர்ம சன்சாத் என்ற மாநாடு நடந்து வருகிறது. சமார் 300 அறிஞர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கிறார்கள். சுமார் 1,700 ஜென்-சி தலைமுறையினர் பங்கேற்றுள்ளனர்.

அவர்களிடையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:- இன்றைய காலத்தில் இளைஞர்கள் தர்மத்தை கடைப்பிடிப்பது குறித்து பேசுவது அரிதாகிவிட்டது. தர்மம் என்றாலே அது வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்று பலர் நினைக்கிறார்கள்.

பகவத் கீதை, ராமாயணம் போன்ற நூல்களை ஓய்வுபெற்ற பிறகு படிக்க வேண்டியவை என்று கருதுகின்றனர்.ஆனால், அது அப்படியல்ல. தர்மம் என்பது மனிதனின் இருப்பின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை நிலைத்திருப்பதாகும். நாம் அதை நம்பினாலும், நம்பாவிட்டாலும், உலகில் பல விஷயங்கள் அதன்படியே நடைபெறுகின்றன.உதாரணமாக, சூரியன் உதிப்பதும் மறைவதும் உறுதியானது. நாம் நம்புகிறோமா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அது தொடர்ந்து நடைபெறும்.

அனைவரையும் ஒன்றிணைத்து, ஒருவர் மற்றவரிடமிருந்து பிரிந்து செல்லாமல் தடுத்து, ஒவ்வொரு உயிரும் பொருளும் தங்களது இயல்புக்கு ஏற்ப இந்த உலகிற்கு செய்ய வேண்டிய கடமையை நிர்ணயித்து, அனைவரும் பொருளாதார மற்றும் ஆன்மிக முன்னேற்றம் அடைய வழிவகுப்பதே ‘தர்மம்’ எனப்படும் ஒழுக்க நெறியாகும்.தர்மம் என்பது சொற்பொழிவுகளில் மட்டுமோ, புத்தகங்களில் மட்டுமோ இருப்பது அல்ல. அது நமது நடத்தையில் வெளிப்பட வேண்டும். புத்தகங்களில் தர்மம் இருந்தாலும், அவை நமக்கு அறிவையும் தெளிவையும் வழங்குவதற்காகவே உள்ளன.

நமது இயல்புக்கு ஏற்ற வகையில், நமது குரு அல்லது பாரம்பரியத்தின் மூலம் நமக்கு வழங்கப்பட்ட வழிபாட்டு முறையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரத்தில், மற்றவர்களின் வழிபாட்டு முறைகளையும் நாம் மதிக்கிறோம். பிறர் பின்பற்றும் வழிபாட்டு முறைகளும் நல்லதே என்று கருதுகிறோம். ஆனால், நமது வழிபாட்டு முறையை மாற்றிக்கொள்ளாமல், நாம் தேர்ந்தெடுத்த வழிபாட்டு நெறியில் உறுதியாக இருக்க வேண்டும். பிறரது வழிபாட்டு முறைகளை மதிப்பதுடன், நமது சொந்த பாரம்பரியத்தையும் வழிபாட்டு முறையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com