

பெங்களூரு,
இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் கருவியுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அவர் பேசிய பேச்சு, எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது. மேலும் நாட்டு மக்களும் இஸ்ரோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். இது எங்கள் விஞ்ஞானிகளின் மனஉறுதியை ஊக்கப்படுத்தியுள்ளது. இவ்வாறு சிவன் கூறினார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறியதாவது:-
சந்திரயான்-2 விண்கலம் தகவல் தொடர்பை இழந்த பிறகு பிரதமர் மோடி, ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். சிவன் மற்றும் அவரது குழு மீது மீண்டும் நம்பிக்கையை வெளிப்படுத்தி பேசியது பாராட்டுக்குரியது. உத்வேகத்தை உண்டாக்கும் வகையிலும், வியக்கத்தக்க வகையிலும் பிரதமரின் பேச்சு அமைந்துள்ளது.
இந்த விஷயத்தில் நமது நாடு, நல்ல சாதகமான கருத்துகளை தெரிவித்துள்ளது. பிரதமர் தனது கருத்தை தெரிவித்த விதம், ஆர்வத்தை தூண்டுவதாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது. சில நேரங்களில் இவ்வாறு கூறப்படும் கருத்துகள் உயர்ந்த வகையில் உள்ளது. இதைவிட நல்ல பேச்சு மற்றும் சிறப்பான கருத்துகளை வேறு யாரும் கூற முடியாது. இவ்வாறு கஸ்தூரிரங்கன் கூறினார்.
இஸ்ரோவின் இன்னொரு முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறும்போது, நாங்கள் உண்மையிலேயே பிரதமருக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். விண்கலம் தரையிறங்கும்போது, சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால் தான் மக்கள் இஸ்ரோவுக்கு அதிகளவில் ஆதரவு வழங்கியுள்ளனர். இது மிக சாதகமான ஒன்று என்றார்.