

பெலகாவியை சேர்ந்த காண்டிராக்டரான சந்தோஷ் பட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
காங்கிரஸ் போராட்டம்
அவர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் மேற்கொண்ட அரசு பணிகளுக்கு நிதியை விடுவிக்க மந்திரி ஈசுவரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறியதுடன், அவரது நெருக்கடி காரணமாக தற்கொலை செய்வதாகவும் செல்போனில் ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் மந்திரி ஈசுவரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஈசுவரப்பா உள்ளிட்டோரை கைது செய்ய கோரி காங்கிரசார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பசவராஜ்பொம்மை அதிரடி
அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் ஆட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இதனால் ஆளும் பா.ஜனதா அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசியலுக்காக போராட்டம்
காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈசுவரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அப்படி இருந்தும் ஈசுவரப்பாவை கைது செய்ய வேண்டும் என்று மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
பா.ஜனதா அரசு ஊழலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் மகான் அல்ல. பரிசுத்தமானவர்கள் இல்லை. ஊழல் முறைகேடுகளிலேயே ஊறியவர்கள். வெறும் ஊழலில் மட்டும் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜனதா அரசு ஊழலில் ஈடுபடுவதாக பேசுவதற்கு தகுதி கிடையாது.
ஊழல்களைஅம்பலப்படுத்துவோம்
எங்கள் ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஊழல், முறைகேடுகள் நடந்தது என்பது பா.ஜனதாவுக்கு தெரியும். அந்த ஊழல்களை மக்கள் முன்பு அம்பலப்படுத்துவோம். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லையா?.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் நடந்ததால் தான் தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்து இருக்கிறார்கள். ஒரு அரசின் மீது ஆதாரம் இல்லாத ஊழல் குற்றச்சாட்டு கூறுவது சரியா?. உங்களது ஆட்சியில் எத்தனை ஊழல் முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மாநிலத்தில் நடைபெற்று வரும் விவகாரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சரியான நேரத்தில் காங்கிரசாருக்கு பாடம் புகட்டுவோம்.
காங்கிரஸ்மூடி மறைக்க முயற்சி
இதற்கு முன்பு போலீஸ் கணபதி தற்கொலை வழக்கில் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ் மீது வீடியோ மூலம் பேசியும், தற்கொலை கடிதத்திலும், எனது சாவுக்கு கே.ஜே.ஜார்ஜ் தான் காரணம் என்று கணபதி கூறி இருந்தார்.
அப்படி இருந்தும் கே.ஜே.ஜார்ஜ் கைது செய்யப்படவில்லை. ஈசுவரப்பா விவகாரத்தில் ஒரு நியாயம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஜே.ஜார்ஜ் விவகாரத்தில் ஒரு நியாயமா?. கே.ஜே.ஜார்ஜ் விவகாரத்தை காங்கிரசார் மூடி மறைக்க முயற்சி செய்யவில்லையா?.
நியாயமான விசாரணை
காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீலின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணையில் அரசின் தலையீடு இருக்காது. நியாயமான முறையில் விசாரணை நடைபெற போலீசாருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. முதற்கட்ட விசாரணை அறிக்கை வந்ததும், எந்த சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பதை போலீசார் முடிவு செய்வார்கள்.
காண்டிராக்டர் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில், எந்தவிதமான பாரபட்சமும் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும். காங்கிரசார் போலீசார், நீதிபதிகள் போல் நடந்து கொள்வதை முதலில் கைவிட வேண்டும். காங்கிரசார் சொல்வது போல் கேட்டு நடக்க சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.