மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்: ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆவேசம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்: ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆவேசம்
Published on

அமராவதி,

மோடி அரசு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி கண்டது.

இதையடுத்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதி நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விஷயத்தில் 5 கோடி ஆந்திர மக்களும் மத்திய அரசு மனம் திருந்தி தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. பிரதமர் மிகவும் ஆணவம் கொண்டவராக இருக்கிறார். அவர் தனது அதிகார பலத்தை வெளிக்காட்டினார். நமது மாநிலத்தை கேலி செய்யும் விதமாக பேசினார். அவருடைய பேச்சு மட்டரகமாக இருந்தது.

ஆந்திராவுக்கு 18 உறுதிமொழிகளை மோடி அளித்து இருந்தார். அதில் சிறப்பு அந்தஸ்து அளிப்பது முதலாவதாக இடம்பிடித்து இருந்தது. ஆனால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. அதற்கு மோடி நிதிக் கமிஷன் அறிக்கையை காரணம் கூறினார். அதில் என்ன தடைகள் இருந்தன என்பதை அவர்தான் விளக்கவேண்டும். நீங்கள் உறுதிமொழி அளித்தீர்கள். எனவே அதை நீங்கள் நிறைவேற்றி இருக்கவேண்டும்.

தொடர்ந்து ஆந்திர மக்களை புறக்கணித்து வந்ததால் கடைசி ஆயுதமாகத்தான் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கொண்டு வந்தது.

எங்களால் பலத்தை நிரூபிக்க முடியாத நிலையிலும் எங்களுடைய கோரிக்கையை நிராகரித்த ஒரே காரணத்துக்காக மாநில மக்கள் பிரதமர் மோடி எதிராக உள்ள உணர்வை வெளிப்படுத்தவே இத் தீர்மானத்தை கொண்டு வந்தோம். அது தோற்கடிக்கப்பட்டு விட்டது. எனினும், மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

இது தொடர்பாக நாளை(இன்று) டெல்லிக்கு சென்று பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com