

பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து சுயேச்சைகளின் ஆதரவுடன் எடியூரப்பா தலைமையில் கடந்த மாதம் பாஜக ஆட்சி அமைத்தது.
கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் ராணி பெண்ணூரு, காகவாடா ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. 15 தொகுதிகளிலும் உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார்.