

சென்னை,
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த 15 வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இதையடுத்து பா.ஜ.க.வின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார்.
ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், நாளை மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார். இதற்கிடையில் இன்று பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்காளத்தில் நிலவிய அச்சமான சூழல் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மாநிலம் நம்பிக்கை நிறைந்த ஒரு சகாப்தத்தை நோக்கி நகரும்.
மேற்கு வங்காள மக்கள் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ளனர். வங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம். வங்காள மக்களின் நலன்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.