பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்க மாட்டோம்; திரிணாமுல் காங்கிரஸ்


பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்க மாட்டோம்; திரிணாமுல் காங்கிரஸ்
x
தினத்தந்தி 25 Aug 2025 5:27 PM IST (Updated: 25 Aug 2025 5:34 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியில் உள்ள வேறு சில கட்சிகளின் தலைவர்களும் ராகுலை பிரதமராக்க ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பீகாரில் சுற்றுப் பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ‘வாக்கு திருட்டு’ என்ற தலைப்பில் அவர் நடத்தி வரும் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள ராகுல்காந்தி, இந்த யாத்திரையில் காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ராகுல்காந்தியின் வாக்கு திருட்டு யாத்திரையில் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ராகுலை பிரதமராக்க வேண்டும், அதற்காக இப்போதே உழைக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் உள்ள வேறு சில கட்சிகளின் தலைவர்களும் ராகுலை பிரதமராக்க ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுபவருக்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் வல்லமை இருக்க வேண்டும். அதற்குரிய தகுதி, திறமையை அவர் நிரூபித்து காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். ராகுல்காந்தியை மறைமுகமாக திறமையில்லாதவர் என்பது போல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து வெளியிட்டிருப்பது இந்தியா கூட்டணியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story