

இந்தூர்,
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தூர் நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய அரசாங்கத்தினால் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரமாண்ட தோல்வியை சந்தித்து உள்ளது. மோடியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தை எட்டிவிட்டது.
இந்த ஆட்சியில் நாடாளுமன்றம் மற்றும் சி.பி.ஐ. போன்ற அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை சிறுமைப்படுத்தப்படுவதை நாடு கண்கூடாக காண்கிறது. மேலும் மோடி அரசு மிகுந்த ஜாக்கிரதையுடன் திட்டமிட்டு ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
மத்தியப்பிரதேசம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். இந்த நிலை மாற்றப்படாவிட்டால் இன்றைய தலைமுறையினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிடப்பட்ட ஒரு திருட்டு மற்றும் சட்டரீதியான கொள்ளையும் ஆகும். இதன் மூலம் நாடு சீரழிவு பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதிலிருந்து விடுபட மக்கள் மோடி அரசை அகற்றவேண்டும் என்று அவர் கூறினார்.