

சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வரச்சா பகுதியில் வசித்துவந்தவர் சாவித்திரிபென் வாட்குஜார் (வயது 47). நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் அவரது வீடு அருகே மேளதாளத்துடன் ஒரு திருமண ஊர்வலம் சென்றது. சாவித்திரிபென் முதல் மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஊர்வலத்தில் சென்ற சிலர் உற்சாகத்தில் துப்பாக்கியால் சரமாரியாக வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர். அப்போது சில குண்டுகள் சாவித்திரிபென்னின் முகத்தில் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.