நாய் குரைத்ததால் நின்றுபோன திருமணம்: மணமகள் செயலால் மீண்டும் வாழ்க்கை கிடைத்தது

மணப்பெண் வீட்டார் வளர்த்த நாய் கூடியிருந்தவர்களை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது.
நாய் குரைத்ததால் நின்றுபோன திருமணம்: மணமகள் செயலால் மீண்டும் வாழ்க்கை கிடைத்தது
Published on

உத்தரபிரதேசம்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி பதேபூரில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அதிகாலை 4 மணிக்கு நடந்த திருமணச் சடங்கின்போது, மணப்பெண் வீட்டார் வளர்த்த செல்ல நாய் ஒன்று, அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. இது மணமகன் வீட்டாரை எரிச்சலடைய செய்தது.

வாக்குவாதம் - கைகலப்பு

ஒரு கட்டத்தில், மணமகன் வீட்டாரின் உறவினர் ஒருவர், அந்த நாய் மீது கல்லை தூக்கி எறிந்தார். இதைப் பார்த்து கோபமடைந்த மணமகள் வீட்டார், நியாயம் கேட்க இருவீட்டார் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாகவும் மாறியது.

ஒரு கட்டத்தில், அருகில் கிடந்த கம்பு, பிளாஸ்டிக் சேர்களை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில், 3 பேரின் மண்டை உடைந்தது. பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, திருமணமும் நின்று போனது.

மீண்டும் கிடைத்த வாழ்க்கை

இதனால், செய்வதறியாது திகைத்த மணப்பெண் தன்யா, கண்ணீர்விட்டு கதறி அழுதார். பின்னர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மணமகன் வீட்டுக்கு சென்று சமாதானம் பேசினார். ஆரம்பத்தில் அவரை ஏற்க மறுத்த மாப்பிள்ளை வீட்டார், பின்னர் மனம் இரங்கி ஏற்றுக்கொண்டனர். இதனால், மணமகள் தன்யாவுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்தது.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "ஜனவரி மாதமே எங்களுக்கு முறைப்படி திருமணம் நடந்துவிட்டது. தற்போது சடங்குக்காக நடந்த திருமணம் நின்று போனதில் எங்களுக்கு கவலை இல்லை" என்று கூலாக தெரிவித்து இருந்தார். இது இருவீட்டாரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com