மேற்கு வங்காளம்: ரூ.34 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்; 7 பேர் கைது

கடந்த மாதத்தில், டெல்லியில் 9 கிலோ தங்கம், 42 கிலோ வெள்ளி மற்றும் ரூ.8.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளம் ரூ.34 கோடி மதிப்பிலான 24 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் இந்தியா-வங்காளதேச எல்லை பகுதியில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டு உள்ளது என ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதுபற்றி தகவல் அறிந்து சென்ற ஆர்.ஐ. இயக்குநரகத்தின் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர் என நிதி அமைச்சக தகவல் தெரிவிக்கின்றது.

கிருஷ்ணாநகரில் இருந்து நாடியா மாவட்டத்தில் உள்ள சக்தஹா நகர் நோக்கி மோட்டார் சைக்கிள்களில் தனித்தனியாக 7 பேர் சென்றுள்ளனர். அவர்களை மறித்து ஆர்.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.

180 தங்கக்கட்டிகள்

அப்போது, வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 180 தங்கக்கட்டிகள் பிடிபட்டன. போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக துணியால் ஆன பெல்ட்டின் உள்ளே மறைத்து, சிறப்பான முறையில் தைத்து வைக்கப்பட்டன. பின்னர் யாருக்கும் வெளியே தெரியாத வகையில் இடுப்பு பகுதியில் பெல்ட்டை கட்டி, அவை கொண்டு செல்லப்பட்டன.

ரூ.34 கோடி

அவற்றின் மொத்த எடை 24 கிலோ ஆகும். ரூ.34 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதத்தில், மற்றொரு நடவடிக்கையில் டெல்லியில் சட்டவிரோத வகையிலான கடத்தல் கும்பலை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கம், 42 கிலோ வெள்ளி மற்றும் ரூ.8.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதேபோன்று, வெளிநாட்டில் இருந்து டெல்லிக்கு 15 கிலோ எடை கொண்ட தங்கம் நூதன முறையில் நேற்று முன்தினம் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதில், தொடர் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளியான வெளிநாட்டு நபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com