

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டம் பத்பரா கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சாய்கந்த் நந்தி (வயது 32), சவுரவ் (வயது 27), பலராம் உள்பட சிலர் நேற்று மதியம் கிராமத்திற்கு அருகே உள்ள ஹுக்லி ஆற்றிள் குளிக்கச்சென்றனர்.
இந்நிலையில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மேலும் ஒரு இளைஞர் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது 4 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் தீவிரமாக தேடினர். இதில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களில் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
மேலும், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய இளைஞரின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். உயிரிழந்த 3 இளைஞர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.