மேற்கு வங்காளம்: நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ல் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கி கொண்டனர்.
அசன்சோல்,
உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ல் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கி கொண்டனர். மேற்கு வங்காளத்தில் அசன்சோல் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கிராமவாசிகள் சிலர் நிலக்கரியை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். அந்த பகுதி எம்.எல்.ஏ.வான அஜய் பொட்டார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றார். இந்த சூழலில், சுரங்க விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரின் உடலும் மீட்கப்பட்டு இருந்தது.
எம்.எல்.ஏ. முன்னிலையில் மீதமிருந்த 2 பேரின் உடலும் மீட்கப்பட்டது. இதனால், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி எம்.எல்.ஏ. கூறும்போது, எலி வசிக்க கூடிய அளவுள்ள பகுதியில் இருந்து நிலக்கரியை சேகரித்து உள்ளனர்.
இந்த விவகாரத்தில் நிலக்கரி மாபியா கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது என கூறினார். நிலக்கரியை எடுப்பதற்காக கிராமவாசிகள் சென்றுள்ளனர். அவர்களே பலியாகி உள்ளனர். மேற்கு வங்காளத்தில் இது அடிக்கடி நடக்கிறது என்றும் கூறினார்.
உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ல் இதுபோன்று கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கி கொண்டனர்.
அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில், 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.






