மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு மையங்களுக்கு சென்று வரிசையில் நிற்கின்றனர்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி (இன்று) 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு போட்டியாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், பா.ஜ.க.வின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலிலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை சந்தித்து, வாக்குகளை சேகரித்தனர்.

மேற்கு வங்காளத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாதிரி வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்தது.

அதற்கு முன்பு, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடந்தது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து மையங்களுக்கு, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்கு வங்காளத்தில் தேர்தலை முன்னிட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.472.89 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 2,728 பறக்கும் படை குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதுதவிர, கண்காணிப்பு குழுக்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டன.

இந்த சூழலில், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு மையங்களுக்கு சென்று வரிசையில் நிற்கின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com