

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக வாக்குப்பதிவு மிக அதிக அளவில் இருந்தது.முதல்கட்ட தேர்தலில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதாவது 3.36 கோடிக்கு மேல் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருந்தனர்.
எஞ்சிய 142 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதி கட்டமாக வாக்குப்பதிவு வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
2-வது கட்டத்தில்தான் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் 2-வது கட்ட வாக்குப்பதிவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்கட்ட தேர்தலில் பெருமளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சில மோதல்கள் மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் 2-வது கட்ட வாக்குப்பதிவுக்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி தொடர்ந்து 4-வது முறையாக முதல்மந்திரியாக வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். அவருக்கு பா.ஜனதா கடுமையான போட்டி அளித்து வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன. 4 முனை போட்டி இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.