

மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து மேற்கு வங்காளத்தின் மேற்கு புர்த்வான் மாவட்டத்தில் உள்ள அந்தல் நகரில் காஜி நஜ்ருல் இஸ்லாம் விமான நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது.
அந்த விமானம் தரையிறங்கும்போது பெரிய அளவில் குலுங்கியுள்ளது. எனினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார். விமானம் பின்னர் சீராக வந்து நின்றது. எனினும் இந்த சம்பவத்தில் பயணிகளின் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகள் அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் 40 பேர் காயம் அடைந்தனர். இதனை ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் ஆபத்து கட்டத்தில் இருந்து நீங்கி விட்டனர் என அந்தல் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.