பிரசார வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முன் பாஜக வேட்பாளர் தர்ணா

மேற்குவங்காளத்தில் பாஜக வேட்பாளரின் பிரசார வாகனத்தை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரசார வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முன் பாஜக வேட்பாளர் தர்ணா
Published on

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 3 கட்டங்களும் முறையே ஏப்ரல் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச்சேகரிப்பின் போது கட்சிகளுக்கு இடையே மோதல்களும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், அம்மாநிலத்தின் பிரம்பு மாவட்டம் சைந்தியா தொகுதி பாஜக வேட்பாளரான பிரியா ஷா நேற்று பிரசாரத்தை முடித்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் கட்சி அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பிரியா ஷா-வின் பிரசார வானத்தை குறிவைத்து மர்மநபர்கள் சிலர் கற்களை வீசியும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாஜக வேட்பாளரின் பிரசார வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன.

இந்நிலையில், தனது பிரசார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியுடன் சைந்தியா பகுதியில் உள்ள காவல்நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்ட பிரியா ஷா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் காவல்நிலைய வாசல் முன் தர்ணாவில் ஈடுபட்டு வரும் பிரியா ஷா, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இங்கேயே அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என பிரியா ஷா கூறினார்.

மேலும், தனது பிரசார வாகனம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் தாக்குதல் நடத்தினர் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com