

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. வீழ்த்தியது. 200-க்கும் மேற்பெட்ட தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மை பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது.
அக்கட்சியை சேர்ந்த சுவேந்து அதிகாரி கடந்த மாதம் 9-ந்தேதி புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றார். பின்னர், டெல்லியில் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக, மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா தலைமையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்படி, மேற்கு வங்காள மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள மக்கள் பவனில் நடந்தது. அதன்படி 13 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 3 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 19 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, ஏற்கனவே பதவியேற்றிருந்த மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனால், முதல்-மந்திரி மற்றும் புதிதாக பதவியேற்ற மந்திரிகளுடன் சேர்த்து, மொத்த மாநில மந்திரிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.