மேற்கு வங்காளம்; ஊழல் வழக்குகளில் இருந்து ஊடக கவனம் திசைதிரும்பவே மந்திரிசபை மாற்றம்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் ஊழல் வழக்குகளில் இருந்து ஊடகங்களின் கவனம் திசைதிரும்ப வேண்டும் என்பதற்காகவே மந்திரிசபை மாற்றம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்காளம்; ஊழல் வழக்குகளில் இருந்து ஊடக கவனம் திசைதிரும்பவே மந்திரிசபை மாற்றம்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உதவியாளரான ஆர்பிதா முகர்ஜியிடம் இருந்து ரூ.35 கோடிக்கும் மேற்பட்ட பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். மேற்கு வங்காள அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மந்திரி மற்றும் கட்சி பதவிகளில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்பட்டார்.

இந்நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, மேற்கு வங்காள மந்திரி சபை முற்றிலும் கலைக்கப்பட்டு புதிய மந்திரி சபை அமைக்கப்படும் என பலரும் பலவிதத்தில் செய்தியாக எழுதி வருகின்றனர்.

ஆனால், அப்படி எதுவும் எங்களிடம் திட்டம் இல்லை. ஆம். மந்திரி சபையில் மாற்றம் இருக்கும். சுப்ரதா முகர்ஜி, சதன் பாண்டே ஆகிய மந்திரிகளை கட்சி இழந்து விட்டது. பார்த்தா சாட்டர்ஜி சிறையில் உள்ளார். அதனால், அவர்கள் அனைவரின் பணியையும் கவனிக்க வேண்டியுள்ளது.

இவற்றை தனியாக என்னால் கவனிப்பது என்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார். அதனால், மந்திரி சபை நாளை மறுநாள் (புதன்கிழமை) மாற்றியமைக்கப்பட உள்ளது. 4 முதல் 5 பேர் புதுமுகங்களாக இடம்பெற வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஊழல் வழக்குகளில் இருந்து ஊடகங்களின் கவனம் திசைதிரும்ப வேண்டும் என்பதற்காகவே மந்திரிசபை மாற்றம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. மேற்கு வங்காள தலைவர் சுகந்தா மஜும்தார் கூறும்போது, மேற்கு வங்காளத்தில் ஊழல் வழக்குகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால், முழு அரசும் ஒரு திருடன் என வங்காள மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். ஒரு திருடன் போய், மற்றொரு திருடன் வந்து மீண்டும் புது தெம்புடன் திருட்டுத்தனம் தொடங்கப்படும். பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடைபெறாது என்று கூறியுள்ளார்.

முதலில், முதல்-மந்திரி மம்தா பதவி விலக வேண்டும். அதன்பின்னரே புதிய மந்திரிசபை அமைக்க வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி அவர் யோசிக்க வேண்டும். பபுல் சுப்ரியோ போன்ற பா.ஜ.கவினர் சிலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து உள்ளனர். அவர்கள் அக்கட்சியில், மந்திரிகளாக வரபோகிறார்களா? என கேட்டுள்ள அவர், அக்கட்சியில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com