

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இதனை தொடர்ந்து சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியானார்.
கடந்த திரிணாமுல் காங்கிரஸ் அரசில் இமாம்கள், கோவில் பூசாரிகளுக்கு மதிப்பூதியம் என்ற பெயரில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய அரசு இதனை நிறுத்த முடிவு செய்துள்ளது.
சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இன்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. நலத்திட்டங்கள் ஆனது, மத அடையாளங்களின் அடிப்படையில் இருக்க கூடாது என்பதற்காக புதிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த நடைமுறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இந்த மாத இறுதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். இதற்கான நோட்டீஸ் முறைப்படி பின்னர் பிறப்பிக்கப்படும் என மந்திரி அக்னிமித்ரா பால் கூறியுள்ளார்.