மேற்கு வங்காள முதல்-மந்திரியின் உதவியாளர் கொலை வழக்கு; 5-வது குற்றவாளி கைது

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் வைத்து வினய் ராய் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
உள்படம்:  வினய் ராய்
உள்படம்: வினய் ராய்
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பவானிபூர் தொகுதியில், போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான மம்தா பானர்ஜியை, பா.ஜ.க. தலைவரான சுவேந்து அதிகாரி வீழ்த்தினார். பா.ஜ.க. 200-க்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இதனை தொடர்ந்து சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியானார். இந்நிலையில், சுவேந்துவின் தனி உதவியாளராக செயல்பட்டு வந்த சந்திரநாத் என்பவர், சட்டசபை தேர்தல் முடிந்த சில நாட்களில், மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை மத்தியாகிராம் பகுதியில் காரில் வைத்து இரவு 10.30 மணியளவில், மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். சுவேந்து வெற்று பெறுவதற்காக தீவிர பணியாற்றியவர் சந்திரநாத். இதனால், சுவேந்து அதிகாரி வரலாற்று வெற்றியை பெற்றார். இந்த சூழலில், அவர் சுட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முசாபர்நகர் போலீசாருடன் இணைந்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5-வது குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் வைத்து வினய் ராய் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. காசிப்பூரில் உள்ள தியோரியா கிராமத்தில் வசித்து வந்த 40 வயது வினய், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில், ராஜ்குமார் சிங் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரே துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். அவரை கொல்கத்தா நகரில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

எதற்காக அவர், சுவேந்துவின் தனி உதவியாளரை சுட்டு கொன்றார்? யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்தது என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com