மேற்கு வங்காள அரசு தலைமைச்செயலாளர் திரும்ப அழைப்பு: ‘மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல்’; மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்காள அரசு தலைமைச்செயலாளரை மத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது. இது மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதையே காட்டுகிறது என்று மம்தா பானர்ஜி ஆவேசமுடன் கூறினார்.
மேற்கு வங்காள அரசு தலைமைச்செயலாளர் திரும்ப அழைப்பு: ‘மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல்’; மம்தா பானர்ஜி ஆவேசம்
Published on

தலைமைச்செயலாளர் திரும்ப அழைப்பு

மேற்கு வங்காளத்தில் யாஸ் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட சென்றிருந்தபோது, கொல்கத்தாவில் ஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியை மட்டும் சந்தித்து விட்டு அவர் சென்று விட்டார். இதற்கு கவர்னர் ஜெகதீப் தாங்கர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசின் தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு அதிரடியாக திரும்ப அழைத்தது. இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வுபெற இருந்த அவருக்கு மம்தா அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு 3 மாதம் பதவி நீட்டிப்பு வழங்கியது. இந்த நிலையில் அவரை திரும்பப்பெற்ற மத்திய அரசு 31-ந் தேதி டெல்லிக்கு வரவழைத்துள்ளது. இது மம்தாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

மோடி காலில் விழத்தயார்

இதையொட்டி அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை தொடர்கிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ஒவ்வொரு எனது அரசுக்கு அடியிலும் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மோடியில் காலில் நான் விழ வேண்டும் என்று சொன்னால், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் உங்களால் (மோடி மற்றும் அமித்ஷா) பா.ஜ.க.வின் தோல்வியைத் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் முதல் நாளில் இருந்து பிரச்சினை

செய்கிறீர்கள். தலைமைச்செயலாளர் செய்த தவறுதான் என்ன?

பழிவாங்கும் அரசியல்

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச்செயலாளரை திரும்ப அழைப்பது, மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதைத்தான் காட்டுகிறது.ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விமர்சிக்கிறார்கள். இந்தக் கூட்டம், பிரதமரும், முதல்-மந்திரியும் பங்கேற்க வேண்டிய கூட்டமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு பா.ஜ.க. தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும்? குஜராத், ஒடிசாவில் நடந்த இத்தகைய கூட்டங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் அழைக்கப்படவில்லையே?

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

மேற்கு வங்காள அரசின் தலைமைச்செயலாளரை மத்திய அரசு திரும்ப அழைத்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்தக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், இது நாட்டின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விழுந்த மரண அடியாகும். இது நாட்டில் முழுமையான மற்றும் ஒட்டுமொத்த அராஜகத்துக்கு வழிவகுக்கும் என சாடினார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவிக்கையில், ஒரு தொற்று நோய்க்கு மத்தியிலும், பேரழிவை ஏற்படுத்திய பெரும் புயலைத் தொடர்ந்தும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, வங்காள தேர்தல் தோல்வி அவர்களால் ஏற்க முடியாமல் இருப்பதையே காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com