

உத்தர் தினாஜ்பூர்
மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து, 294 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில் கொடி ஏற்றும்போது இரு கட்சியினர் இடையே மோதல் வெடித்தது.
இதில் இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். இதுபற்றி உத்தர் தினாஜ்பூர் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவர் சுராஜித் சென் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த பகுதியில் கொடியேற்ற முயன்றபோது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள், எங்களுடைய தொண்டர்களை தாக்கினர்.
அமைதியான வாக்குப்பதிவு இந்த பகுதியில் சாத்தியமில்லை என கூறினார். தேர்தலே இன்னும் தொடங்கவில்லை. பா.ஜ.க. தொண்டர்கள் தாக்கப்படுகின்றனர். திரிணாமுல் காங்கிரசின் குண்டர்கள் எங்களை கொடி ஏற்ற விடாமல் அடித்து, தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறினார். இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டது.