

கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் கடந்த 23ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 29ம் தேதியும் நடைபெற்றது. தேர்தலில் 92.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனிடையே, 2ம் கட்ட தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றன. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளர் ஜஹாங்கீர்கான் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம் பால்டா தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளராக திபன்சங் பாண்டா, காங்கிரஸ் வேட்பாளராக அப்துர் ரசாக் மொல்லா களமிறங்கியுள்ளனர்.
அதேவேளை, 29ம் தேதி நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலின்பொது பால்டா தொகுதியில் பல்வேறு முறைகேடுகள், வன்முறைகள் நடைபெற்றது. தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக வேட்பாளரின் பெயர், சின்னத்தை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்க முடியாத வகையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். சில வாக்குச்சாவடிகளுக்குள் அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைந்தனர். சில வாக்குச்சாவடிகளில் வன்முறை நடைபெற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் தீவிரமான விதிமீறல்கள் நடைபெற்றன. இதையடுத்து, பால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில், பால்டா தொகுதிக்கு வரும் 21ம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளுக்கும் வரும் 21ம் தேதி மறுதேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 29ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.