மேற்கு வங்காளம்: திரையரங்குகளில் தினமும் ஒரு பெங்காலி படம் கட்டாயம்

வங்க மொழி மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கொல்கத்தா,
இந்தியாவில் இந்திக்கு அடுத்ததாக அதிக மக்களால் பேசப்படுவது வங்காள மொழி. இந்தியாவில் 10 கோடி பேர் வங்கம் பேசுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் பிற மாநிலங்களைவிட அதிகம் ஆகும்.
இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் அனைத்து திரையரங்குகளிலும் தினமும் ஒரு வங்காள மொழித் திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வங்க மொழி மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் தொடங்கிய 'வங்க மொழி இயக்கத்'தின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்த உத்தரவின்படி வங்கத்தின் அனைத்து திரையரங்குகளிலும் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலான முக்கிய நேரத்தில் ஒரு வங்கமொழி திரைப்படமேனும் திரையிடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்காலி திரைத் துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.






