மேற்கு வங்காளம்: பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுப்பு; திரிணாமுல் காங்கிரசின் 2 எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

கவர்னர் மாளிகைக்கு, பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வரும்படி 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் மேற்கு வங்காள கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்காளம்: பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுப்பு; திரிணாமுல் காங்கிரசின் 2 எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்
Published on

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புதிதாக எம்.எல்.ஏ.க்களாக சயந்திகா பந்தோபாத்யாய் மற்றும் ரயத் உசைன் சர்கார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 2 பேருக்கும் மேற்கு வங்காள சட்டசபை வளாகத்தில் கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை என கூறப்படுகிறது.

கவர்னர் மாளிகைக்கு, பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வரும்படி 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வராத சூழலில் 2 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி சர்கார் கூறும்போது, சட்டசபைக்கு வந்து பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரிடம் வேண்டுகோள் வைத்தோம். அல்லது அவர் சார்பில் சபாநாயகரை அந்த பணியை செய்ய அனுமதிக்கும்படி கேட்டோம் என்றார்.

எனினும், 2 கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு விட்டன. அதனால், அவர்கள் இருவரும் கைகளில், வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னர் மறுபரிசீலனை செய்து, எம்.எல்.ஏ.க்களாக தங்களுடைய பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

பதவி பிரமாணம் ஏற்காமல் தங்களால் அதிகாரப்பூர்வ முறையில் எம்.எல்.ஏ.க்களாக செயல்பட முடியவில்லை என பந்தோபாத்யாய் வேதனை தெரிவித்து உள்ளார். எனினும், கவர்னர் வராததற்கான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com