

கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் நாளான கடந்த 7-ந்தேதி கவர்னர் ஜெக்தீப் தாங்கர் உரையாற்றினார். அப்போது உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக சபையில் பா.ஜனதாவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் தனது உரையை தொடர்ந்து வாசிக்க முடியாமல் கவர்னர் பாதியிலேயே நிறுத்தி விட்டார். எனினும் முழுதாக வாசிக்குமாறு ஆளும் திரிணாமுல் காங்கிரசின் பெண் எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் சட்டசபையில் நடந்த அமளியை பாராட்டியதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கவர்னர் ஜெக்தீப் தாங்கர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், நாம் எங்கே செல்கிறோம். சட்டசபை அமளியை மாண்புமிகு முதல்வர் ஏன் பாராட்டுகிறார்? என குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் ஜனநாயகம் மலர நாம் அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
ஆனால் கவர்னரின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கைகோர்த்து பாதியிலேயே திரும்ப வேண்டும் என்ற முடிவோடுதான் சட்டசபைக்கு கவர்னர் வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.